வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க கேட்பது நாடகமல்ல’; பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி


வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க கேட்பது நாடகமல்ல’; பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி
x

பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதும், கேள்வி எழுப்புவதும், விவாதிக்க கேட்பதும் நாடகம் அல்ல என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவரும் மேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூனா கார்கே அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், காற்று மாசுபாடு ஆகியவை மிகப் பெரிய பிரச்சினைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். பாராளுமன்றம் எதற்காக? அவற்றைப் பற்றி விவாதிக்கத்தான் இருக்கிறது. பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவது, கேள்வி எழுப்புவது, விவாதிக்க கேட்பது—இவை நாடகம் அல்ல” என்று பிரியங்கா கூறினார் இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டதாவது:

“குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், பாராளுமன்றத்துக்கு வெளியே முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை நாடக உரையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற ஒழுக்கத்தையும் அமைப்பையும் தொடர்ந்து மத்திய அரசு நசுக்கி வருகிறது என்பதே உண்மை. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.

சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்கள், ஜிஎஸ்டி, பிஎன்எஸ்எஸ் போன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் ‘புல்டோசர்’ மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் கண்டிருக்கிறது. மணிப்பூர் பிரச்சினை எழுப்பப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் வரை நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். ‘வாக்கு திருட்டு’ உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. நாங்கள் அவற்றை பாராளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story