கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொன்று 7 ஆண்டுகளாக நாடகமாடிய பெண்

கணவரை கொன்று நாடகமாடிய பெண்ணையும், கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த பீரப்பா கள்ளக்காதலை கைவிடும்படி சாந்தாபாயிடம் கூறி கண்டித்தார்.
இதில் கோபமடைந்த சாந்தாபாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் பீரப்பாவை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். பின்னர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி கணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைத்தார்.
இந்தநிலையில் கூலிப்படையினருக்கு, சாந்தாபாய் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் சாந்தாபாயிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதில் சில பேச்சுகளை அவர்கள் ஆடியோவாக பதிவு செய்து வைத்திருந்தனர். இதற்கிடையே அந்த ஆடியோக்களை சிலர் கைப்பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த ஆடியோக்கள் வைரலான நிலையில், பீரப்பாவின் குடும்பத்தினர் இதுகுறித்து கலபுரகி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தாபாயை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதையடுத்து போலீசார் சாந்தாபாயை கைது செய்தனர். மேலும் கூலிப்படையினரான மகேஷ், சுரேஷ், சித்து மற்றும் சங்கர் ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்தனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பின்பு அது வெளிச்சத்துக்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






