நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய அரசு விளக்கம்


நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 15 Sept 2025 1:54 PM IST (Updated: 15 Sept 2025 2:55 PM IST)
t-max-icont-min-icon

நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு, எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும் எனவும், ஆக்ரோஷமான, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு, சுத்தமான நீர், கிருமி நாசினி மூலம் கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நாய் கடித்த உடன் சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும், நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு, எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் முறையாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story