இன்ஸ்டாகிராம் காதல்... சிறுமியை திருமணம் செய்த வாலிபர் சிறையில் அடைப்பு

சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பெரியமதகு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஷ்வா (20 வயது). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியிடம், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய விஷ்வா, தனது கிராமத்திற்கு வருமாறு சொல்லி உள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி சிறுமி பரங்கிப்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கோவிலில் விஷ்வா, சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி மாயமானது குறித்து, அவரது பெற்றோர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது சிறுமி பரங்கிப்பேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் விஷ்வாவை கைது செய்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். கைதான விஷ்வா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






