பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது - இந்தியா உறுதி

தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும். இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது. உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மூன்று போர்கள், கார்கில் மோதல், மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் இருந்தாலும், இது ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து உள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீண்டும் தொடராத வகையிலும் தனது ஆதரவை நிறுத்தும் வரை சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். நமது பிரதமர் கூறியது போல, 'தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது' என தெரிவித்தார். காஷ்மீர் தொடர்பான எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடப்பதானால், அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தொடர்பாக மட்டுமே பேசப்படும் என்றும் கூறினார்.