நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்த இண்டிகோ


நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்த இண்டிகோ
x

அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது.

புதுடெல்லி,

விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, விமானிகள் பற்றாக்குறையால் தொடர்ந்து இண்டிகோ விமான சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3, 4, 5 தேதிகளில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தற்போது இண்டிகோ விமான சேவை ஓரளவுக்கு சீராகியுள்ளது.

இதையடுத்து அந்த தேதிகளில் பயணித்த அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்பிலான பயணக் கூப்பன் வழங்கப்படும் என்று இண்டிகோ அறிவித்தது. மேலும் இண்டிகோ விமானம் ரத்தால் விமானப் பயணங்களில் ஏற்பட்ட பெரும் இடையூறுகள் குறித்து விசாரணை நடத்திய குழு, அதன் அறிக்கையை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் (DGCA) சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில், இண்டிகோ செயல்பாட்டு குளறுபடியால் பல நூறு விமானங்கள் ரத்தானதால் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி 10% சேவையை குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் 94 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது.

இதில் பெங்களூருவில் தான் அதிக உள்நாட்டு விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமான சேவை குறைக்கப்படவில்லை. மும்பையில் வருகை-புறப்பாடு என இரண்டு விமானங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு நாட்களில் திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை சற்று மாறுபடக்கூடும் என்பதால், மற்ற நாட்களுக்கான அட்டவணை மாற்றங்களில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story