பிரேசிலில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாட்டு முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு


பிரேசிலில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாட்டு முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
x

ஒருதலைப்பட்ச வர்த்தக-கட்டுப்பாட்டு பருவநிலை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இடம் வழங்கியதற்காக இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு பிரேசிலின் பெலமில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இந்த மாநாடு, கடுமையான பருவநிலை சீற்றத்தை சமாளிக்க நாடுகளுக்கு கூடுதல் நிதியுதவி அளிப்பதாக உறுதிமொழியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டம் அதில் சேர்க்கப்படவில்லை.

பருவநிலை மாற்ற மாநாட்டின் பல்வேறு முடிவுகளுக்கு இந்தியா திருப்தியும், வரவேற்பும் தெரிவித்து உள்ளது. அத்துடன் மாநாட்டின் உள்ளடக்கிய தலைமைத்துவத்துக்காக பிரேசிலுக்கு வலுவான ஆதரவையும் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகளாவிய தகவமைப்பு இலக்கின் முன்னேற்றத்தை இந்தியா வரவேற்கிறது என்றும், வளரும் நாடுகளில் தகவமைப்புக்கான அதிகப்படியான தேவையை அங்கீகரிப்பதை இது பிரதிபலிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் நாடுகள் எடுத்துள்ள முதல் நடவடிக்கைகள் காரணமாக, 33 ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது நிறைவேற்றப்படும் என்று சர்வதேச ஒத்துழைப்பின் உணர்வில் முழுமையாக நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் ஒருதலைப்பட்ச வர்த்தக-கட்டுப்பாட்டு பருவநிலை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இடம் வழங்கியதற்காக இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்து வளரும் நாடுகளையும் அதிகளவில் பாதித்து வருவதாகவும், ஐ.நா. பருவநிலை மாநாடு மற்றும் அதன் பாரீஸ் ஒப்பந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் கொள்கைகளை மீறுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

1 More update

Next Story