சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.






