இம்ரான்கான் உயிருடன் உள்ளார்... ஆனால்... - சகோதரி அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் .
லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், இம்ரான்கானை குடும்பத்தினர் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, அடியாலா சிறை முன் இம்ரான்கான் குடும்பத்தினர், தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இம்ரான்கான் உடல்நிலை மோசமாகி இருக்கலாம் என்றும் அவர் சிறையிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி வந்தனர்.
அதேவேளை, சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கானும்க்கு சிறைத்துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அவரது சகோதரி உஸ்மா இன்று நேரில் சந்தித்தார். இம்ரான் கானை சிறையில் சந்தித்தப்பின் உஸ்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இம்ரான் கான் உயிருடன் உள்ளார். ஆனால் அவருக்கு மன ரீதியில் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நாள் முழுவதும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வேறு யாருடனும் பேச அனுமதிக்கப்படுவதில்லை’ என்றார்.






