25 சதவீத வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் எவ்வளவு பாதிப்பு?

கனிமங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரிவிலக்கு பொருந்தாது.
புதுடெல்லி,
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி நடக்கிறது.
இவற்றில், அமெரிக்காவின் வரிவிலக்கு சட்ட விதிப்படி, பாதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிலக்கு அளிக்கிறது. மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், முக்கியமான கனிமங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரிவிலக்கு பொருந்தாது. எனவே, 4 ஆயிரத்து 800 கோடி டாலர், அதாவது மொத்த ஏற்றுமதியில், ஏறத்தாழ பாதி மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில், 1,030 கோடி டாலர் மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி, 1,200 கோடி டாலர் மதிப்புள்ள நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 224 கோடி டாலர் மதிப்புள்ள இறால் ஏற்றுமதி, 118 கோடி டாலர் மதிப்புள்ள தோல் மற்றும் காலணி ஏற்றுமதி, 234 கோடி டாலர் மதிப்புள்ள ரசாயனங்கள் ஏற்றுமதி, 900 கோடி டாலர் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் ஏற்றுமதி ஆகியவை பாதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.