ஒரே மேடையில் நடந்த இந்து, முஸ்லிம் திருமணம்; புனேவில் நெகிழ்ச்சி


ஒரே மேடையில் நடந்த இந்து, முஸ்லிம் திருமணம்; புனேவில் நெகிழ்ச்சி
x

முஸ்லிம் குடும்பத்தினர் மணமேடையில் இந்து தம்பதியின் திருமணத்திற்கு தேவையான சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ய உதவினர்.

மும்பை,

மராட்டிய மாநிலம், புனே வான்வோரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சம்பவத்தன்று மாலை முஸ்லிம் குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுமண தம்பதியரான மகீன்-மோக்சின் காஷி ஆகியோர் மணமடையை அலங்கரித்துக்கொண்டு இருந்தனர்.

அதேநேரம் அந்த மண்டபத்தின் அருகே உள்ள ஒரு திறந்தவெளியில் சமஸ்கிருதி கவாடே பாட்டீல் மற்றும் நரேந்திர கலாண்டே பாட்டீல் ஆகிய இந்து தம்பதியின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. திருமணத்தை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால் திருமணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாலை 6.56 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத்தொடங்கியது.

திறந்தவெளி என்பதால் அங்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்கள் அங்கும், இங்கும் ஓடி அல்லாடினர். இதனால் அங்கு குழப்பம் நிலவியது. அப்போது அருகில் உள்ள திருமண மண்டபம் இந்து குடும்பத்தினரின் நினைவுக்கு வந்தது. எனவே திருமண தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே முஸ்லிம் குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

ஆனால் மழை நிற்காததால் வேறு வழியின்றி இந்து குடும்பத்தினர், மோக்சின் காஷி குடும்பத்தினரிடம் திருமணத்தை அங்கு நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முஸ்லிம் குடும்பத்தினர் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டனர். முஸ்லிம் குடும்பத்தினரும் மணமேடையில் இந்து தம்பதியின் திருமணத்திற்கு தேவையான சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ய உதவினர். விறுவிறுவென முடிந்த வேலைகள் காரணமாக அதே மேடையில் இந்து தம்பதியின் திருமண சடங்குகள் நடந்தேறியது.

பின்னர் இரு சமூகங்களை சேர்ந்த மணமக்களும் கூட்டாக மணமேடையை பகிர்ந்து கொண்டதுடன், உறவினர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். திருமண விருந்திலும் ஒன்றாக கலந்துகொண்டனர். மத நல்லிணக்கத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக அரங்கேறிய இந்த சம்பவம் புனே மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story