குஜராத்: பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - விசாரணையில் தகவல்


குஜராத்: பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - விசாரணையில் தகவல்
x

குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றுப் பாலம் கடந்த 2 தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இதில் அந்த வாகனங்களில் இருந்த 19 பேர் பலியானார்கள். மேலும் பலர் மாயமானார்கள். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே நேற்று இரவு மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டதால், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று வதோதரா கலெக்டர் அனில் தமேலியா கூறினார். பாலம் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக, மாநில சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் 4 என்ஜினீயர்களை இடைநீக்கம் செய்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நடத்தில் இடத்தில் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் படேல் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், " பாலத்தின் தூண் மற்றும் இருப்பு நொறுங்கியதே விபத்துக்கு காரணம். 30 நாட்களுக்குள் இந்த சம்பவத்தின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உள்ளடக்கிய விரிவான அறிக்கையை விசாரணை குழு சமர்ப்பிக்கும். அந்த அறிக்கை முதல்-மந்திரியிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எங்கெல்லாம் தவறுகள் நடந்துள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயங்காது. மாநிலத்தில் சாலைகள் மற்றும் பாலங்களின் கட்டமைப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

1 More update

Next Story