திருமண ஊர்வலத்தின் போது லாரி மோதி மணமகன் பலி

டெல்லி-சகரன்பூர் நெடுஞ்சாலையில் திருமண ஊர்வலம் நடைபெற்றபோது விபத்து ஏற்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபோத். பிச்சோக்ரா நகரில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த இவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். எனவே திருமணத்துக்கு முந்தைய சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் தனது சொந்த ஊரான சரூர்பூர்கலானுக்கு சென்றிருந்தார். பின்னர் டெல்லி-சகரன்பூர் நெடுஞ்சாலையில் அவரது திருமண ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சுபோத் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்து வேகமாக சென்ற ஒரு லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமண ஊர்வலத்தின்போது விபத்தில் மணமகன் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.






