இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்கிறது: பிரதமர் மோடி

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும் என பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது;
இன்று அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் பெற்றுள்ளனர். உங்கள் புதிய பொறுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. பொருளாதாரத்தை , உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது , தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும். உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ந்த பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும். ஆட்டோமொபைல் மற்றும் காலணித் தொழில்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி புதிய சாதனைகளை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் மூன்று பேர் பெண்கள். தொழில்நுட்பம், தரவு , புதுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் எழுச்சிக்கு இளைஞர்கள் உந்துசக்தியாக உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.