தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு பொருளாதார குற்றவியல் சிறப்பு கோர்ட்டில் ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நடிகை ரன்யா ராவ், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். துபாயில் இருந்து ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தபோது, அவரை போலீசார் தங்களது வாகனத்தில் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக தெலுங்கு நடிகரும், ரன்யா ராவின் காதலனுமான தருண், இவர்களிடம் இருந்து தங்கம் வாங்கியதாக ஜெயின் மற்றும் பரத்குமார் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரன்யா ராவ் மீது காபிபோசா வழக்குப்பதிவாகி உள்ளதால், ஓராண்டுக்கு அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கு குறித்து விசாரித்து வந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், பெங்களூரு பொருளாதார குற்றவியல் சிறப்பு கோர்ட்டில் ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த குற்றப்பத்திரிகை 2,200 பக்கங்களை கொண்டதாக உள்ளது. குற்றப்பத்திரிகையில் 350 பக்கங்கள் சாட்சிகள் அளித்த வாக்குமூலம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 127 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர ரன்யா ராவ், தருண், பரத்குமார், ஜெயின் ஆகியோர் இடையே நடந்த வங்கி பண பரிமாற்றங்கள், அடிக்கடி துபாய்க்கு சென்று வந்ததற்கான விமான டிக்கெட் உள்ளிட்ட தகவல்களையும் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
இதனால் ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு விசாரணை கூடிய விரைவில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






