பிரதமர் மோடி வங்காள மண்ணில் கால் வைப்பதில் கடவுளுக்கு விருப்பமில்லை: சவுகடா ராய்

பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களை விட மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சிறப்பாக உள்ளது என்று சவுகடா ராய் கூறினார்.
கொல்கத்தா,
பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட தகேர்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நேரில் பங்கேற்று பேச திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கடும் பனியால் அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல், கொல்கத்தா விமான நிலையத்திற்கு திரும்பியது.
இதன்பின்னர், ராணாகாட் பகுதியில் நேதாஜி பூங்காவில் காணொலி காட்சி மூலம் அவர் பேசினார். அப்போது, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏன் மக்களை பணயக்கைதிகளாக வைத்து, அவர்களை துன்புறுத்துகிறது? என கேட்ட அவர், கம்யூனிஸ்டுகளின் அனைத்து தீய குணங்களையும் உள்வாங்கிக்கொண்டு, அதன் மிக மோசமான தலைவர்களையும் தன் வசம் சேர்த்துக்கொண்டது போல் தெரிகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே பேசியதுபற்றி குறிப்பிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சவுகடா ராய், அவருடைய அரசியல் பொதுக்கூட்டம் வெற்றி பெறவில்லை. வங்காள மண்ணில் பிரதமர் மோடி கால் வைக்க கடவுளுக்கு விருப்பமில்லை. பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களை விட மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சிறப்பாக உள்ளது என்றும் கூறினார்.






