20 கோடிக்கும் அதிகமான திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் - சி.பி.ஐ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்


20 கோடிக்கும் அதிகமான திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் - சி.பி.ஐ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x

5 ஆண்டுகளில் 20 கோடிக்கும் அதிகமான லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் நடந்திருப்பது குறித்து சி.பி.ஐ. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2019 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 20.14 கோடி லட்டுகள் கலப்பட நெய்யை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கலாம், என கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் 42 சதவீதம் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 48.76 கோடி லட்டுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஐந்தில் இரண்டு பங்கு லட்டுகள், அதாவது 20.14 கோடிக்கும் அதிகமான லட்டுகள், இயற்கையான பால் சார்ந்த கொழுப்புக்குப் பதிலாக, செயற்கையான மற்றும் ரசாயனங்கள் கலந்த நெய்யை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கலாம், என்று யூகிக்கப்படுகிறது.

வழக்கமான தயாரிப்பின் போது பொருட்கள் கலந்துவிட்டதால், தூய நெய்யால் செய்யப்பட்ட லட்டுகள் எவை, கலப்படமான நெய்யால் செய்யப்பட்ட லட்டுகள் எவை என்று கோவில் நிர்வாகத்தால் பிரிக்க முடியவில்லை, என திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு இந்த புள்ளிவிவரங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஜூன் முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், லட்டு தயாரிப்பு மற்றும் தினசரி நைவேத்தியத்துக்காக திருப்பதி தேவஸ்தானம் மொத்தம் 1.61 கோடி கிலோ நெய்யை ரூ.534.7 கோடி செலவில் கொள்முதல் செய்துள்ளது.

ஆய்வக சோதனைகள் மற்றும் வினியோகஸ்தர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்த இருப்பில் 68 லட்சம் கிலோ நெய், அதாவது கிட்டத்தட்ட ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகள், கலப்படம் செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

கலப்பட நெய்யை வழங்கிய நிறுவனங்களாக, உத்தரகாண்டின் போலே பாபா டைரி மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள ஏ.ஆர். டைரி, ஆந்திரப் பிரதேசத்தின் வைஷ்ணவி டைரி, உத்தர பிரதேசத்தின் மால் கங்கா டைரி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

விசாரணையில் நெய், பால் அல்லது வெண்ணெயில் இருந்து பெறப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாமாயில் மற்றும் பாம்கர்னல் ஆயில் ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பீட்டா கரோட்டின் கொண்டு தடிமனாக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.

செயற்கை சுவைகள் மற்றும் மோனோ மற்றும் டிகிளிசரைடுகள், லாக்டிக் அமில எஸ்டர், அசெட்டிக் அமில எஸ்டர் போன்ற குழம்பாக்கிகள் சேர்க்கப்பட்டு, நெய்யின் இயல்பான அமைப்பை ஒத்திருக்குமாறு தயாரிக்கப்பட்டு, அதனை தரமாக்கி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சமையல் அறையான ‘போட்டு' வில் தினமும் சுமார் 11,500 முதல் 13,000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

5 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 48.76 கோடி லட்டுகளின் சராசரி நெய் பயன்பாடு, கொள்முதல் செய்யப்பட்ட 1.61 கோடி கிலோ நெய்யுடன் சரியாகப் பொருந்துவதால், கலப்படத்தின் அளவை துல்லியமாக மதிப்பிட முடிந்தது.

இந்தக் காலகட்டத்தில் 10.97 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகை தந்துள்ளனர். கலப்பட நெய் பொதுவான இருப்புடன் கலக்கப்பட்டதால், எந்த பக்தர் தூய பிரசாதத்தை அல்லது கலப்பட பிரசாதத்தை பெற்றார் என்பதைக் கண்டறிவது இப்போது சாத்தியமற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story