ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் சென்றதால் பரபரப்பு

கோப்புப்படம்
சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு நாள்தோறும் சுமார் 1,500 விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த விமான நிலையத்துக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஏ-310 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தின் 29-எல் என்ற ஓடுபாதையில் இறங்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அந்த விமானம் தவறுதலாக 29-ஆர் என்ற ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது அந்த ஓடுபாதையில் மற்றொரு விமானமும் சென்றதால் மோதுவதுபோல் சென்றது. அதிர்ஷ்டவசமாக இரு விமானங்களும் மோதாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விமானி கூறுகையில், மோசமான வானிலை மற்றும் ஐ.எல்.எஸ். எனப்படும் ரேடியோ வழிசெலுத்தல் அமைப்பு செயலிழந்ததால் தவறுதலான ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியதை அவர் ஒப்புக்கொண்டார். எனினும் இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.






