திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பவுர்ணமி கருடசேவை ரத்து

பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான கருடசேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்தது. எனினும், இன்று இரவு தொடங்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று இரவு பவுர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோல் ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோவிலில் கிரகண தோஷ நிவாரணை பூஜைக்குப் பிறகு 8-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 82 ஆயிரத்து 118 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.