மும்பையில் பின்னோக்கி சென்ற பஸ் மோதி 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்

விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெறுவதையும் படத்தில் காணலாம்.
மும்பை,
மும்பை பாண்டுப்பில் உள்ள ரயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாநகர பஸ் ஒன்று அங்கு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) ஓட்டினார். பகவான் பாவ் கரே (47) கண்டக்டராக பணியில் இருந்தார்.பஸ் நிறுத்தம் அருகே வந்ததும், எதிர்பாராத விதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றது.
அப்போது அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த 13 பேர் மீது பஸ் மோதி பலத்த காயமடைந்தனர். பின்னர் பஸ் ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றது. உடனடியாக அப்பகுதியினர் திரண்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜாவாடி மற்றும் எம்.டி. அகர்வால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படையினர், போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானவர்களுக்கு மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டார். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் கைது செய்யப்பட்டார்.






