விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு: விமான சேவைகள் தாமதத்தால் பயணிகள் அவதி

வாரணாசி மட்டும் இன்றி ஐதரபாத் சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. கம்ப்யூட்டரில் செக் இன் அமைப்புகளில் நிகழ்ந்த இந்த கோளாறால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் சேவை செயலிழப்பு காரணமாக விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாரணாசி விமான நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விமானங்களில் செக் இன் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
வாரணாசி மட்டும் இன்றி ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தங்கள் விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், சில இடங்களில் பொறுமை இழந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய விமான நிலைய ஊழியர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர். பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட மிக முக்கியமான விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் நிலவியது.






