மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க நினைத்த தந்தை - தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூரம்


மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க நினைத்த தந்தை - தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூரம்
x

மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செயது கபட நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்கரகா கிராமத்தை சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (வயது 45), விவசாயி. இவரது மகள் மஞ்சுளா (17). இந்த சிறுமி கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

குண்டேராவ் நீராலுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மஞ்சுளா நேற்று முன்தினம் தூக்கில் பிணமாக தொங்கினாள். அவளது தந்தை, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் சம்பவம் பற்றி அவர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தை அவள் தூக்கில் தொங்கிய அறையில் போலீசார் கைப்பற்றினர். அதில், தனது தற்கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் காரணம். அவர் நிலத்தகராறில் தினமும் தகராறு செய்து மனரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் கால் ஊனமுற்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தந்தை குண்டேராவ் நீராலு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், குண்டேராவ் நீராலுவுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தான் பெற்றெடுத்த மகளை கொன்றுவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் நிலத்தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனையில் மஞ்சுளா தற்கொலை செய்ததாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை போலீசில் சிக்க வைத்துவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று வீட்டில் வேறுயாரும் இல்லாத சமயத்தில் தான் பெற்றெடுத்த மகள் என்று கூட பாராமல் மாற்றுத்திறனாளியான மஞ்சுளாவை தூக்கில் தொங்கவிட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளார். பின்னர் மஞ்சுளா எழுதியது போல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story