கேரள முதல்-மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்புடைய மசாலா பத்திரங்கள் வழக்கில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பாக அன்னிய செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது தனி செயலாளர் மற்றும் முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் ரூ. 468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன்முதலில் இத்தகைய ரூபாயில் வெளியிடப்பட்ட பத்திரங்களை வெளியிட்ட மாநிலம் கேரளா ஆகும். கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது. இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்னதாகவே தாமஸ் ஐசக்குக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.






