ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு

விமானிகளின் கடைசி நிமிட உரையாடல்களை வைத்து விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்து விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி விசாரணை நடத்தி வருகிறது. தமது விசாரணையின் முக்கிய கட்டமாக விபத்து எப்படி நிகழ்ந்திருக்கிறது என்பது தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விமான எரிபொருள் விநியோகிக்கும் பொத்தான்கள், இன்ஜின்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, அவை பின்னர் செயலிழந்து போயிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. விமானிகளின் உரையாடல்கள் குறித்த விவரங்களும் வெளியாகின.
இந்நிலையில்,இது தொடர்பாக தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு, "விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷயத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.
விசாரணைக் குழு பாராட்டுக்குரிய வகையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முதிர்ச்சியானதாகவும் வெளிப்படையானதாகவும் உள்ளது.விசாரணைக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது, விபத்து தொடர்பாக சில முடிவுகளுக்கு எங்களால் வர முடியும். விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த விமானிகளும் விமானப் பணியாளர்களும் எங்களிடம் இருப்பதாக நான் உண்மையாகவே நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.