மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடியோடி 18 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தத்தொடங்கி உள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டாரு மகேஸ் மோகனரு தலைமையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்தார். யோக நிலையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி எழுப்பி பின் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.
நடை திறக்கப்பட்ட பின், சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடியோடி 18 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்யத்தொடங்கி உள்ளனர். டிசம்பர் 27-ம் தேதி பிரதான மண்டல பூஜைகள் நிறைவு பெற்றதும் சபரிமலை கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் டிசம்பர் 30-ல் மகர விளக்கு பூஜைக்களுக்கு சபரிமலை திறக்கப்பட்டு 2026 ஜனவரி 20-ல் நடை அடைக்கப்படும். வரும் ஜனவரி 14-ல் சபரிமலையில் பிரசித்திபெற்ற மகரஜோதி தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
62 நாட்கள் நடக்கும் பூஜைக்காக போக்குவரத்து, தங்குமிடம், மருத்துவம்,அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








