சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறிவிட்டது - கேரள ஐகோர்ட்டு கண்டனம்

கோப்புப்படம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறி விட்டதாக கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
கொச்சி,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடுமையான குளிரையும், கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
18-ம் படிகளுக்கு அருகிலும், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. நீண்ட நேர தாமதங்களால் சில பக்தர்கள் தடுப்புகளை தாண்டி செல்வதும் கூட நடைபெறுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தேவசம்போர்டு காவலர்கள், போலீசார் திணறி வருகின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
சபரிமலையில் தேவையான ஏற்பாடுகள் செய்ய தேவசம்போர்டு தவறிவிட்டது. கூட்டத்தை நிர்வகிப்பது தொடர்பாக கோர்ட்டு அளித்த அறிவுறுத்தல்களை தேவசம்போர்டு பின்பற்றவில்லை. தேவையான பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தனை பேர் ஒரே நேரத்தில் கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டது ஏன்?
சன்னிதானம், பம்பை, நிலக்கல், இடைப்பட்ட பகுதிகளில் எத்தனை பேருக்கு இடமளிக்க முடியும் என்பது குறித்த துல்லியமான தரவு தேவஸ்தானத்திடம் இல்லை. பக்தர்களை தனித்தனி பிரிவுகளாக பிரிப்பது, கூட்டத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவும். அனைவரையும் ஒன்றாக முன்னோக்கி தள்ளுவதற்கு பதிலாக இது பாதுகாப்பானது. தேவஸ்தான அதிகாரிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் கவலையை தெரிவித்தனர்.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலைக்கு அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.






