டெல்லி கார் வெடிப்பு: சமூகவலைதளம் மூலம் சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் - பரபரப்பு தகவல்

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை 4 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் வெடிப்பு சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே தற்கொலை குண்டாக பலியாகி விட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முசாபர் என்பவர் ஆப்கானிஸ்தான் தப்பிச் சென்றிருப்பதாக தெரிகிறது. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான செயல் முறையில் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பு பயங்கரவாதிகள் அந்த தாக்குதலை எப்படி நடத்துவது?, தாக்குதலுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை எவ்வாறு உருவாக்குவது? என்பதை "யூடியூப்" மூலம் அறிந்துள்ளனர். அல்பலா பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து 3 பேர் கட்டளையிட்டுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரிய வந்துள்ளது.
உகாசா பைசான், ஹாஸ்மி என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். இவர்களிடம் உமர் முகமது, அதில் ராதர் மற்றும் முசாமில் ஷகீல் உள்ளிட்டோர் சிரியா அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் அந்த கட்டளைதாரிகள் 3 பேரும் இந்தியாவில் இருந்தே வேலைகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தங்களுக்குள் செய்திகளை பரிமாற்றம் செய்ய ‘டெலிகிராம்’ மற்றும் ‘மாஸ்டோன்’ செயலியை பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செயற்கை நுண்ணறிவையும் (ஏ.ஐ.)அதிகம் பயன்படுத்தி உள்ளார்கள்.






