டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: அரியானா பெண் டாக்டர் கைது

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பல டாக்டர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
புதுடெல்லி,
டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. இதில் அவனும் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவனுடன் தொடர்பில் இருந்த பெண் டாக்டர் உள்பட பயங்கரவாத குழுவின் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக எம்.பி.பி.எஸ். மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
அரியானா மாநிலம் அல்பலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பு படித்து வரும் ஜனிசூர் ஆலம் என்கிற நிசார் ஆலம் என்ற மாணவர்தான் புலானாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். அவர் மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூரின் அருகே உள்ள கோனல் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். லூதியானாவில் வசித்து வருகிறார். அவரை நேற்று முன்தினம் காலை சுர்ஜாபூர் பஜார் பகுதியில் உளவுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது பிடிபட்டார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பல டாக்டர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண் டாக்டர் ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் பிரியங்கா ஷர்மாவை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, கைது செய்யப்பட்ட டாக்டர் அதீல் அளித்த தகவலின் பேரில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பிரியங்கா ஷர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். அவரது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கான்பூர், லக்னோ, மீரட் மற்றும் ஷஹரன்பூர் உள்பட பிற நகரங்களில் காஷ்மீர் மாணவர்கள் பயிலும் கல்லூரிகள், பல்கலைகளையும் பயங்கரவாத தடுப்பு போலீசார் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு விசாரித்து வருகின்றனர்.






