டெல்லி கார் வெடிப்பு: சூட்கேசில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டாக்டர் உமர் - பரபரப்பு தகவல்

டெல்லி கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை 4 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் வெடிப்பு சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே தற்கொலை குண்டாக பலியாகி விட்டார். இது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான பயங்கரவாதி டாக்டர் உமர் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன்படி, வெடிகுண்டு பரிசோதனைகளில் அவர் மிகவும் கைதேர்ந்தவர் என சக பயங்கரவாதிகள் போலீசில் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு விவகாரங்களில் தன்னை ஒரு ராஜாவாகவே அவர் கருதுவார் என அவர்கள் கூறியுள்ளனர்.
எங்கு சென்றாலும் ஒரு சூட்கேசை கையில் வைத்திருப்பார் என்றும், அதில் வெடி மருந்துகள், அதை வெடிக்கச் செய்வதற்கான பிற கலவைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு நடமாடும் வெடிகுண்டு நிலையமாகவே அவர் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலில் அவர் இறங்காவிட்டால் ஒரு மிகப்பெரிய அணுகுண்டு விஞ்ஞானியாக மாறியிருப்பார் என்று மற்றொரு பயங்கரவாதி முஷாமில் ஷகீல் அதிகாரியிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






