சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் பொறுப்பு: தொலைதொடர்பு துறை எச்சரிக்கை


சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் பொறுப்பு: தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
x

வாடிக்கையாளர்கள் சிம்கார்டை மற்றவர்களுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய தொலைதொடர்பு துறை ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிம்கார்டு, ஆன்லைன் மோசடி அல்லது இதர சட்டவிரோத காரியங்களுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளர்தான் குற்றவாளியாக கருதப்படக்கூடும் என்பதை மொபைல் சந்தாதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, வாடிக்கையாளர்கள் சிம்கார்டை மற்றவர்களுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்போன்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண்களை சிதைத்தல், திருத்துதல், மாற்றுதல் ஆகியவற்றுக்கு தொலைதொடர்பு விதிமுறைகள்-2024 தடை விதிக்கிறது. அத்தகைய செல்போன்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கிறது. எனவே, ஐ.எம்.இ.ஐ. எண் சிதைக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஐ.எம்.இ.ஐ. எண்களை சிதைப்பது உள்ளிட்ட தொலைதொடர்பு சட்டத்தை மீறும் காரியங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.50 லட்சம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்கள் பற்றிய விவரங்களை ‘சஞ்சார் சாதி’ வலைத்தளம் அல்லது செல்போன் செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதில், செல்போனின் வர்த்தக பெயர், மாடல், உற்பத்தியாளர் தகவல் ஆகியவை இருக்கும். உதிரிபாகங்கள் இணைக்கப்பட்ட மோடம் உள்ளிட்ட சாதனங்களை வாங்கக்கூடாது. போலி ஆவணங்கள், மோசடி, ஆள் மாறாட்டம் ஆகியவை மூலமாக சிம்கார்டு வாங்கக்கூடாது என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story