கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ள முதல்-மந்திரி பதவி விவகாரம்

“கொடுத்த வாக்கை காப்பாற்றுவது உலகில் பலம் வாய்ந்தது” என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி பதவி விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
'வேர்டு பவர் இஸ் வேர்ல்டு பவர்' (வார்த்தை பலம் உலக பலம்) ஆகும். ஒருவர் தனது வாக்கை காப்பாற்றுவது தான் உலகில் மிகப்பெரிய பலம் வாய்ந்தது. நீதிபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி இந்த கருத்து பொருந்தும். யாராக இருந்தாலும் வாக்குப்படி நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முதல்-மந்திரி சித்தராமையா காங்கிரஸ் அரசு அமைந்தபோது, 2½ ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரத்தை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக் கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு இதை நினைவூட்டும் வகையில் டி.கே.சிவக்குமார் அந்த பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு போடுவதற்கு முன்பே நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் இதே கருத்தை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி மற்றும் கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் தொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதையொட்டியும், தனக்கு முதல்-மந்திரி பதவியை மேலிட தலைவர்கள் வழங்க வலியுறுத்தியும் டி.கே. சிவக்குமாரின் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






