சஞ்சார் செயலி உத்தரவு வாபஸ்; கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக முன்கூட்டியே நிறுவப்பட வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
‛சஞ்சார் சாத்தி' என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக மக்கள் சைபர் பாதுகாப்பை பெற முடியும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதனால் தான் இந்த செயலியை Pre Installation முறையில் செல்போன், ஐபோன்களில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ‘சஞ்சார் சாத்தி' செயலி வழியாக மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
இதனிடையே, மத்திய அரசு சஞ்சார் சாத்தியின் அம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளது. மத்திய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருக்கிறது. அதுவும் ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக முன்கூட்டியே நிறுவப்பட வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.






