இண்டிகோ பிரச்சினைக்கு நடுவே விமான கட்டணங்கள் உயர்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை


இண்டிகோ பிரச்சினைக்கு நடுவே விமான கட்டணங்கள் உயர்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
x

விமான கட்டணங்கள் சீராகும் வரை கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தின. இந்த நிலையில், இண்டிகோ பிரச்சினைக்கு நடுவே விமான கட்டணங்கள் உயர்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி விமான வழித்தடங்களின் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் குறுகிய உள்நாட்டு வழித்தடங்களில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 500-1,000 கி.மீ. வரை ரூ.12,000, 1000-1500 கி.மீ. வரை ரூ.15,000 மற்றும் 1500 கி.மீ.க்கு மேல் ரூ.18,000 வரை கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உச்சவரம்புகளில் UDF, PSF மற்றும் வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வணிக வகுப்பு கட்டணங்கள் மற்றும் RCS-UDAN விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணங்கள் சீராகும் வரை கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து முன்பதிவு தளங்கள், விமான வலைத்தளங்கள் மற்றும் முன்பதிவு செயலிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story