கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

கோப்புப்படம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் சூர்யகாந்த், எஸ்.வி.என்.பட்டி, ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
கேரளாவில் நடக்கும் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரரின் வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால், கேரள விவகாரத்தை அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள், கேரள வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான மனு, 26-ந்தேதியும், மற்ற மாநிலங்கள் தொடர்பான மனுக்கள் டிசம்பர் முதல் அல்லது 2-வது வாரத்திலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.






