டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு: மத்திய அரசு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி இந்தியாவில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டார். இதில் இந்தியாவுக்கு 27 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு இந்தியாவில் ஏற்றுமதியை வெகுவாக பாதிக்கும் என கருதப்படுகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'டிரம்பை பொறுத்தவரை முதலில் அமெரிக்காதான். ஆனால் பிரதமர் மோடிக்கு இந்தியாதான் முதலிடம். அமெரிக்கா விதித்துள்ள இந்த பரஸ்பர வரியின் பாதிப்பு குறித்து மதிப்பிட்டு வருகிறோம்' என்று கூறினார். இதற்கிடையே அமெரிக்காவின் பரஸ்பர வரியில் 10 சதவீதம் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாகவும், மீத தொகை 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு முற்றிலும் பின்னடைவாக இருக்காது எனவும், கலவையான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.