விபத்தில் சிக்கிய கார்: படுகாயம் அடைந்த மணமகள்.. மணமகன் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி சம்பவம்

மணமகள் சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆலப்புழா,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (வயது 25). தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.
மணமகள் ஆவணி, ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார். காரை ஆவணி ஓட்டினார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனால் மணமகன் ஷாரோன், ஆஸ்பத்திரிக்கே சென்று மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார். இருப்பினும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






