கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பயணிகள் அவதி

கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் சூழலை பயன்படுத்தி ஆட்டோ, கார்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் சார்பில் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன.இதில் 1½ லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், 38 மாத நிலுவைத்தொகையை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்டு 5-ந் தேதி (அதாவது இன்று) முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்களுடன் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் அனந்த் சுப்பாராவ், நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஊழியர்கள் தரப்பில், சம்பள உயர்வு, 38 மாத நிலுவைத்தொகையை விடுவிக்குமாறு கோரினர். அதற்கு சித்தராமையா 14 மாத நிலுவைத்தொகை வழங்குவதாக உறுதியளித்தார். இதை ஏற்க ஊழியர்கள் தரப்பினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து இந்த பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதலே பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது. பெங்களூருவில் குறைந்த அளவிலேயே பி.எம்.டி.சி. பஸ்கள் இயங்கின. அதாவது பல ஊழியர்கள் இரவு முதலே வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருத்து தெரிவித்த கர்நாடக ஐகோர்ட்டு, போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளனர்.பெங்களூரு, சிக்கமகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி, மங்களூரு, மைசூரு, தும்கூர், ஹாசன், மடிகேரி, சிவமொக்கா மற்றும் கலபுரகி போன்ற முக்கிய நகரங்களில் பஸ் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் பங்கேற்காத சில ஊழியர்களைக் கொண்டும் பயிற்சி ஓட்டுநரைக் கொண்டும் குறைந்தபட்ச அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால், பயணிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இந்த சூழலைப் பயன்படுத்தி தனியார் பஸ் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, வாடகை கார்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.