மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
காந்திநகர்,
சவுதி அரேபியாவின் மதீனாவில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தனர். இது குறித்து விமானிக்கு தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த அகமதாபாத் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதியம் 12.30 மணியளவில் விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும், பணியாளர்களும் இறக்கிவிடப்பட்ட பின்னர், விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் போலீசார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






