வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின்போது நிர்வாணமாக நின்ற அலுவலர் - வீடியோ வெளியாகி பரபரப்பு

பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தவனூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். வாக்காளர்களிடம் படிவங்களை பூர்த்தி செய்யும்போது பொது இடத்தில் அவர் திடீரென தனது ஆடையை களைந்து நிர்வாணமாக நின்று உள்ளார். இதைப்பார்த்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று டி.வி. சேனல்களில் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.
உடனடியாக அந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் தீவிர திருத்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






