மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மேற்கு வங்காள மாநிலம் நதியா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரிங்கு டரப்டர் (வயது 54). அரசுப்பள்ளி ஆசிரியையான இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியால் மிகுந்த பணிச்சுமை, மன உளைச்சல் அடைந்த ஆசிரியை ரிங்கு இன்று தனது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்படவில்லையென்றால் நிர்வாக ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை’ கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியை ரிங்கு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரிங்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த சாந்திமோனி என்ற வாக்குச்சாவடி நிலை அலுவலரும் கடந்த 19ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அங்கன்வாடி ஊழியரான சாந்திமோனி வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் உள்ள பணிச்சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியால் அரசு ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா தெரிவித்துள்ளார்.






