அழகான தங்கத்திற்கு பின்னால்... ஒளிந்திருக்கும் மனித குலத்திற்கான ஆபத்து; அதிர்ச்சி தகவல் வெளியீடு

தங்கம் பிரித்தெடுக்கப்படும்போது, தண்ணீர் மாசுபாடு, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு, காற்று மாசுபாடு ஆகியவற்றுடன் உலோக நச்சுகள் இந்த மண்ணில் கலக்கின்றன.
புதுடெல்லி,
பொதுவாக மஞ்சள் உலோகம் என வர்ணிக்கப்படும் தங்கம், அழகு நகைகளாக உருமாற்றம் செய்யப்படும்போது அதனை வேண்டாம் என யார் கூற போகிறார்கள்? நகை என்றால் பெண்களுக்கு அலாதி பிரியம் ஏற்படும். அவற்றை அணிந்து பார்ப்பதுடன், மற்றவர்களும் பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நடந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் உண்டு.
ஆண்களும் அதனை மோதிரம், சங்கிலி உள்பட பல வகைகளில் பயன்படுத்தி கொள்கின்றனர். ஆபரணங்களாக அணிந்து அழகு பார்க்க உதவும் இந்த தங்கம் எப்படி உருவாகிறது என்று தெரிந்தால் அது சற்றே அதிர்ச்சியான தகவலை தருகிறது. தங்க சுரங்கத்தில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. அப்போது, தண்ணீர் மாசுபாடு, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு, காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், உலோக நச்சுகள் இந்த மண்ணில் கலந்து ஆபத்து காரணிகளை ஊக்குவிக்கின்றன.
தங்க சுரங்கங்கள், பாதரசம் மற்றும் சயனைடு போன்ற ரசாயனங்களை பயன்படுத்துகின்றன. அவை பின்னர் ஆறுகளிலும், நிலத்தடி நீரிலும் கசிந்து ஊடுருவும் வாய்ப்பு காணப்படுகிறது.
இந்த பாதரசம் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித சுகாதாரத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஆண்டுதோறும் 1,400 டன் பாதரசம் வெளிவிடப்படுகிறது. எனினும், தங்கம் பிரிப்புக்கான பாதுகாப்பான முறைகளின் வழியேயும், நச்சுகளை தவிர்க்க முடியும். கழிவு நீரை வெளியிடுவதற்கு முன் முறையாக அவற்றை சுத்திகரித்து பின் வெளியிட்டு, மாசுபாட்டை குறைக்கலாம்.
தங்க சுரங்கங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலியலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அமேசான் காடுகளில் மட்டுமே சட்டவிரோத தங்க சுரங்கங்களால் சமீபத்தில் 4,200 ஹெக்டேர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் ஒன்று கூறுகிறது. மரங்கள் இழப்பால், மண் அரிப்பு அதிகரிப்பதுடன், கார்பன் வெளியீடும் கூட அதிகரிக்கிறது.
எனினும், சீரான பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில், பொறுப்புடன் செயல்பட கூடிய தங்க சுரங்கங்களை ஊக்குவித்து இவற்றை கட்டுப்படுத்தலாம். அரசுகளும், நிறுவனங்களும் அதற்காக நில நிர்வாக கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த தங்க சுரங்கங்களுக்காக தோண்டப்படும் குழிகளும், வீணாக விடப்படும் பகுதிகளும், வளம் நிறைந்த மேல் மண்ணை அகற்றி விடும் ஆபத்து உள்ளது. நில உற்பத்தியை குறைக்கும் வகையிலான செயல்களும் நடக்கின்றன. ஆண்டுதோறும் 20 சதவீதத்திற்கும் கூடுதலான மண் அரிப்பு விகிதங்களும் காணப்படுகின்றன என சில சுரங்கம் சார்ந்த தளங்களின் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
ஆனால் கூட, மண்ணரிப்பு தடுப்பு நடவடிக்கைகளான, காய்கறிகளை பயிரிடுதல் உள்ளிட்டவற்றால் இவற்றை தடுக்கலாம். குழிகளை மீண்டும் மண்ணால் நிரப்புதல் மற்றும் தங்க சுரங்க நிலங்களை மீட்டெடுப்பது, மண்ணின் தன்மை இழப்பை தாமதப்படுத்துகிறது.
சுரங்க நடவடிக்கைகளால், தூசு பரவல் மற்றும் காற்று சார்ந்த மாசுபாடு ஏற்பட்டு, அருகேயுள்ள சமூக மக்களின் சுகாதாரம் மற்றும் வனவாழ் உயிரினங்களும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. தங்க சுரங்கங்களில் வெடிப்பு நிகழ்த்தப்படும்போது, விலங்குகள் அச்சத்தில் ஓடி விடுகின்றன.
எனினும், நீர் தெளிப்பு மற்றும் செடி, கொடி மற்றும் மரங்களை வளர்ப்பது உள்ளிட்டவற்றால் தூசு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். வெடிப்புக்கான கால அளவை வரைமுறைப்படுத்தலாம். இடையூறுகளை குறைக்க ஒலி தடுப்பு சாதனங்களை பயன்படுத்தலாம்.
சுரங்கங்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும்போது வெளியிடப்படும் பாதரசம், உணவு சங்கிலியில் சேர்கிறது. இது சுரங்க தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளை வெகுவாக பாதிக்கிறது. பாதரச வாயுக்கள், நரம்பு மற்றும் நரம்பு செல்கள் மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் பெற்றது.
அதனால், பாதரசத்தின் தீங்குளை பற்றி சுரங்க தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேறு வழிகளை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். உலகளவில் பாதரச பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், மினமதா மாநாடு உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று மனித குலத்திற்கும், பிற உயிரினங்களுக்கும் வாழ்வியல் சார்ந்த ஆபத்துகளை ஏற்படுத்த கூடிய தங்க சுரங்கங்களை பற்றிய அதிர்ச்சியான விசயங்கள், நமக்கு எடுத்துரைப்பது என்னவென்றால், அழகுக்கு பின்னால் பெரும் ஆபத்து உள்ளது என்ற தகவலையே சுட்டி காட்டுகிறது.
இந்தியாவில் நாள்தோறும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வதும், பின்னர் குறைவதும் என போக்கு காட்டி வரும் சூழலில், அதன் உற்பத்திக்கு பின்னால் இவ்வளவு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய காரணிகளும், விசயங்களும் ஒளிந்துள்ளன. அழகுக்கு பின்னால் ஆபத்து என இதனைதான் கூறுகிறார்கள் போலும். ஆனாலும், நம் மக்கள் தங்க நகைகளை பயன்படுத்துவதில் தனி கவனம் செலுத்தியே வருகின்றனர்.
அதற்கான விலை பணம் என்ற அளவில் மட்டும் இல்லாமல், மனிதன், விலங்கினங்களின் உயிரும் அதற்கான விலையாக மாறுகிறது என்ற உண்மையையும் மறைப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ இடமில்லை.






