இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

ஜன்னல் வழியாக யாரோ மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 18-ந் தேதி வெளியே சென்று விட்டு இரவு ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்ற அந்த இளம்பெண், குளிக்க சென்றார். அவர் குளித்து விட்டு தலையை துடைத்தபோது, குளியல் அறையின் ஜன்னல் வழியாக யாரோ மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்தது அவர் ஏறி வந்த ஆட்டோவின் டிரைவரான திருவனந்தபுரம், வெடி வச்சான் கோவில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜிபின் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜிபினை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.






