முதலிரவு குறித்து பதற்றம்... பல்பு வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு ஓடிய புதுமாப்பிள்ளை

மனைவியின் அருகில் சென்றபோது பதற்றம் மேலும் அதிகரித்ததாக மொஹ்சீன் கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த மொஹ்சீன் என்பவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மொஹ்சீனுக்கு 2 சகோதரிகள் உள்ளனர். மொஹ்சீனின் திருமணம் முடிந்த மறுநாளே, அவரது 2 சகோதரிகளின் திருமணங்களையும் ஒரே மேடையில் நடத்தி முடிக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிலையில், மொஹ்சீனின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, முதலிரவு அறைக்கு அவரையும், அவரது புதிய மனைவியையும் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர். அந்த அறையில் இருந்த மின்விளக்குகள் மிகவும் வெளிச்சமானதாக இருந்துள்ளன. இதனால் மொஹ்சீனின் மனைவி அவரிடம் வெளிச்சம் குறைவான பல்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து மொஹ்சீன், வீட்டில் வெளிச்சம் குறைவான பல்பு எதுவும் தற்போது இல்லை எனவும், அருகில் உள்ள கடைக்கு சென்று பல்பு வாங்கி வருவதாகவும் கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர் அடுத்த நாள் நடைபெற உள்ள 2 திருமணங்களுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், மொஹ்சீனை யாரும் கவனிக்கவில்லை.
இதற்கிடையில் பல்பு வாங்கி வருவதாக கூறிச் சென்ற மொஹ்சீன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை வரை அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனாலும் மொஹ்சீன் திரும்பி வராததால், வேறு வழியில்லாமல் அவரது 2 சகோதரிகளின் திருமணங்களையும் மொஹ்சீன் இல்லாமலேயே நடத்தி முடித்தனர். பின்னர் மொஹ்சீன் காணாமல் போனது குறித்து போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், வீட்டை விட்டுச் சென்று 5 நாட்களுக்குப் பிறகு அரித்துவார் பகுதியில் இருந்தபடி மொஹ்சீன் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து தகவலறிந்து போலீசார் உடனடியாக அரித்துவார் சென்று மொஹ்சீனை மீட்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமண நாளன்று தனக்கு முதலிரவு குறித்து பதற்றம் ஏற்பட்டதாகவும், தனது மனைவியின் அருகில் சென்றபோது மேலும் பதற்றம் அதிகரித்ததாகவும் மொஹ்சீன் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு ஓட்டியதாக மொஹ்சீன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தகுந்த ஆலோசனைகளை வழங்கி, மொஹ்சீனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.






