டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

சம்பவம் தொடர்பாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்திருந்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் டெல்லி போலீசார் விசாரித்தனர். அப்போது பலரை அவர்கள் பிடித்து ரகசிய விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இவர்கள் இந்த வழக்கில் முழு விவரங்களையும் கண்டுபிடித்தனர். சம்பவத்தில் டாக்டர் உமர் என்பவர் தற்கொலை குண்டாக வெடித்து சிதறியதையும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உமரோடு தொடர்பில் இருந்த 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்திருந்தனர். இவர்கள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் சோயாப். அரியானா மாநிலத்தின் அல்பலா பல்கலைக்கழகம் அருகே உள்ள தவுஜ் பகுதியில் உமருக்கு இவர் ஒருநாள் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தளவாட உதவிகளையும் வழங்கி உள்ளார். இதன் பேரில் புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்து உள்ளனர்.






