ஆந்திரா: போலீசார் அதிரடி சோதனை - 50 மாவோயிஸ்டுகள் கைது

போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அமராவதி,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.
இதனிடையே, ஆந்திர மாநிலம் அல்லுரி சீதா ராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி மண்டலம் வனப்பகுதியில் நேற்று போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி மாட்வி ஹிட்மாவும் அடக்கம்.
இந்நிலையில், மாவோயிஸ்டுகள் என்கவுன்டரை தொடர்ந்து ஆந்திராவில் 5 மாவட்டங்களில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெண்கள் உள்பட 50 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள், ரூ. 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.






