எஸ்.ஐ.ஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பா.ஜ.க. சதி - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகிறது. தேர்தல் கமிஷனின் இந்த பணிகளை சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இது குறித்து அவர் கூறுகையில், ‘உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் கமிஷனுடன் இணைந்து பா.ஜ.க. மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், ‘இந்தியா’ கூட்டணியும் வெற்றி பெற்ற இடங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே நாங்கள் உஷாராக இருக்கிறோம்’ என குற்றம் சாட்டினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் சதியில் இறங்கி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.






