டெல்லியில் காற்று மாசு எதிரொலி: 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவு

5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் உள்ளது. மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். மக்களை காக்க டெல்லி அரசு பல்வேறு மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்டுமான பணிகளுக்கு தடை, இடிபாடுகளை கொண்டு செல்ல தடை, பெயிண்ட் அடிக்க தடை போன்ற பல தடைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தன. 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கவும் அனுமதிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு ஏற்ற வகையில் தடையற்ற மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை உடனுக்குடன் சரிசெய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களிடையே மாசுபாட்டுக்கான எச்சரிக்கைகளை விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.






