பீகார் முதல்கட்ட தேர்தலுக்கு பின்... சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட் ஒப்புகை சீட்டுகள் - பரபரப்பு தகவல்

தேர்தல் நடைமுறையின் நேர்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என ஞானேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வடைகிறது.
இந்த நிலையில், விவிபாட் எனப்படும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர் அறிந்து கொள்வதற்கும், உறுதி செய்து கொள்வதற்கும் உதவிடும் ஒப்புகை சீட்டுகள் (VVPAT) சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் சராய்ரஞ்சன் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கல்லூரி ஒன்றின் அருகே சாலையோரம் அவை கிடந்துள்ளன. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
எனினும் இந்த ஒப்புகை சீட்டுகள், மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவானவை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் கூறும்போது, உண்மையான தேர்தல் நடப்பதற்கு முன்பு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அதற்கான ஒப்புகை சீட்டுகள்தான் அவை.
இந்த சம்பவம் தொடர்ச்சியாக, உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என கூறினார். தேர்தல் நடைமுறையின் நேர்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என அவர் உறுதிப்படுத்தினார். இதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட், தொடர்புடைய வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டார் என்றும் அவர் கூறினார்.






