16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு... தலைநகரில் இப்படி ஒரு நிலையா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை

நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆசிட் வீச்சு சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது என்று குறிப்பிட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், “16 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளதா? எந்த கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது?” என்று கேட்டார். டெல்லி ரோகிணி கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மேலும், தற்போது அந்த பெண் தன்னைப் போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்காக பணி செய்து வருகிறார் எனவும், சில பெண்களை ஆசிட்டை குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர் என்றும், அத்தகைய பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் அவர் போராடி வருகிறார் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “தயவு செய்து மனு ஒன்றை தாக்கல் செய்யுங்கள். 2009-ல் பதியப்பட்ட வழக்கின் விசாரணை இன்னும் ஏன் முடியவில்லை என்பதை கூறுங்கள். சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தும். தலைநகரில் இப்படி ஒரு நிலையா? இது மிகவும் வெட்கக்கேடானது. குற்றவியல் விசாரணையில் ஏற்படும் தாமதம் நீதி அமைப்பை கேலி செய்வது போன்றதாகும்” என்று வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் அனைத்து ஆசிட் வீச்சு தொடர்பான வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து ஐகோர்ட்டுகளின் பதிவாளர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.






