காதல் மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்

தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கணவர் மிரட்டியதாக அந்த பெண் தெரிவித்தார்.
துமகூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் இந்திரகுமார். இவரது மனைவி நளினா. இந்த தம்பதியின் மகன் யஷ்வாசி (வயது 32). இந்திரகுமாரும், நளினாவும் துமகூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஆவர். இந்த நிலையில் இந்த தம்பதியின் மகன் யஷ்வாசி, ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய யஷ்வாசி, அவரது மனைவி இடையே திடீரென்று புயல்வீச தொடங்கியுள்ளது. அதாவது அந்த பெண்ணை யஷ்வாசியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் அந்த இளம்பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் யஷ்வாசிக்கு 2-வது திருமணம் செய்து வைக்க இந்திரகுமார்-நளினா முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த அந்த இளம்பெண் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தனது பெற்றோருடன் சேர்ந்து யஷ்வாசி, தன்னுடைய காதல் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதுபற்றி போலீசில் புகார் அளித்தால், தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகவும் யஷ்வாசி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் பற்றி துமகூரு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், யஷ்வாசி, அவரது பெற்றோர் மீது திருமண சட்டத்தை மீறுதல், தாக்குதல், மிரட்டல் மற்றும் அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.